டட்சன் நிறுவனத்தின் புதிய டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் காரின் முன்பதிவு தொடங்கப்பட்டது.
ஜப்பானின் நிசான் குழுமத்தின் அங்கமான டட்சன் நிறுவனத்தின் டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடல்கள் இந்தியச் சந்தையில் 2014-ம் ஆண்டிலிருந்து மிகவும் பிரபலமாக விளங்குகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் இந்நிறுவனம் டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடலில் மேம்படுத்தப்பட்ட ஹேட்ச்பேக் மாடலை அறிமுகம் செய்தது. இந்நிலையில், டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் சி.வி.டி. மாடல்களுக்கான முன்பதிவு தற்போது துவங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் புதிய கார்களுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11,000 என நிர்ணயம் செய்துள்ளது. இதில் ஆட்டோமேடிக் கியர் வசதியுடன் (சி.வி.டி.) இந்த இரண்டு மாடல்களும் அறிமுகமாக உள்ளது. மேலும், இந்த சி.வி.டி. மாடல் 1.2 லிட்டர் என்ஜின் 3 சிலிண்டரைக் கொண்ட பெட்ரோல் மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 68 ஹெச்.பி. திறன் மற்றும் 104 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது.
இந்த புதிய மாடலில் முன்புற கிரில் அழகிய தோற்றத்துடனும், எல்.இ.டி. டி.ஆர்.எல். முகப்பு விளக்கு, 14 அங்குல டயமண்ட் கட் அலாய் சக்கரங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டரில் டாகோ மீட்டர் (என்ஜினின் ஆர்.பி.எம். வேகத்தை டிஜிட்டல் முறையில் காட்டும்), 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் வசதியோடு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும்,
ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி கூடுதலாக டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் இ.எஸ்.சி. எனப்படும் மின்னணு முறையிலான கட்டுப்பாட்டு வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதனுடன் வெஹிகிள் டைனமிக் கண்ட்ரோல் வசதி கொண்ட இந்த பிரீமியம் மாடலானது இந்தோனேசியாவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதுபோல் இந்த மாடல் இந்திய சந்தையில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.