சீன ராணுவம் இந்திய வீரர்களை திட்டமிட்டு கொலை செய்ததாக மத்திய அரசின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்
கடந்த 15ஆம் தேதி இரவு இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சீன மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தாக்குதல் சீனாவால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இதில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு சீன ராணுவம் தான் பொறுப்பு என சாடியுள்ளது.
இந்திய ராணுவ வீரர்கள் சிலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டும், மோதலில் சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில் இந்தியா மீது நடத்தப்பட்ட தாக்குதல் இரண்டு தினங்களுக்கு முன்பே சீனாவால் திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய அரசின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சம்பவம் நடந்த அன்று கள்வன் பகுதியில் இந்திய ராணுவத்தினர் வந்த சமயம் சீன ராணுவத்தினர் உயரமான பகுதியில் இருந்து சிற்றறை தடுத்து நீரை வெளியேற்றி உள்ளனர்.
இதனால் அதிவேகமாக வந்த தண்ணீரில் இந்திய வீரர்கள் விழுந்து அடித்து செல்லப்பட்டனர். அதோடு சீன வீரர்களே பல இந்திய வீரர்களை தண்ணீரில் தள்ளி விட்டதும் தெரியவந்துள்ளது. அதோடு இந்திய வீரர்களின் பலத்தை அறிவதற்கு வான்வழி வாகனத்தை பறக்கவிட்டு உளவு பார்த்துள்ளனர். அதன் பிறகே எல்லைக்கோட்டின் மறுபுறம் தங்களது படையை அதிகரித்து பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்டவற்றை அணிந்து கூர்மையான ஆயுதங்களுடன் இந்திய வீரர்களை தாக்க தொடங்கியுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.