சென்னை பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் செல்வம். இவர், தனக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவைத்தொகை மற்றும் வருங்கால வைப்பு நிதி தொகை ஆகியவற்றைக் கேட்டு நந்தனத்தில் உள்ள சம்பள கணக்கு அலுவலகத்தில் 2008ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார்.
அப்போது பணியில் இருந்த கணக்காளர் புருஷோத்தமன், இந்தத் தொகையை அனுமதிக்க ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார். செல்வம் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், முன்பணமாக 500 ரூபாய் கொடுக்கும்படியும், சம்பள நிலுவை தொகை மற்றும் வருங்கால வைப்பு நிதி தொகையை அனுமதித்த பின்பு மீதமுள்ள தொகையை கொடுக்கும்படியும் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வம், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறையின் அறிவுரைப்படி செல்வம், லஞ்சப்பணம் 500 ரூபாயை புருஷோத்தமனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், புருஷோத்தமனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஓம்பிரகாஷ், குற்றம்சாட்டப்பட்ட புருஷோத்தமனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசுத் தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே குற்றவாளிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.