பொங்கல் பரிசு பணத்தை செலவு செய்த கல்லூரி மாணவர் தாயாருக்கு பயந்து பூஜை அறையில் உள்ள உறை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை மாவட்டத்திலுள்ள எம்ஜிஆர் தெருவில் சின்னத்தம்பி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்செல்வன் என்ற ஒரு மகன் உள்ளார்.இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத காரணத்தால் இவர் அருகில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் இரவு நேர வேலைக்கு சென்றுள்ளார். இவர் தனது பெற்றோருக்கு தெரியாமல் நகையை அடகு வைத்து அந்த பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்து வந்துள்ளார்.
இதனையடுத்து ரேஷன் கடையிலிருந்து பொங்கல் பரிசு தொகுப்பு ரூபாய் 25௦௦-ஐ வாங்கி வந்து அதில் இரண்டாயிரத்தை செலவு செய்துவிட்டு பின்னர் மீதி இருந்த 5௦௦ ரூபாய் பணத்தை மட்டும் கொடுத்துள்ளார். அதன்பின் அவரது தந்தை ரூபாய் 2000 பற்றி அவரிடம் கேட்டதற்கு அந்த பணம் தொலைந்து விட்டதாக கூறியுள்ளார். எனவே இதுகுறித்து அவரது தாயாரிடம் சொல்லுவதாக தந்தை கூறியுள்ளார். இதனால் தாயாருக்கு பயந்த தமிழ்ச்செல்வன் அவரது வீட்டில் உள்ள பூஜை அறையில் உள்ள 30 அடி ஆழம் கொண்ட உறை கிணற்றில் கீழே குதித்து விட்டார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த அவரது பாட்டி பச்சையம்மாள் கூச்சலிட்டார். அவரின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அந்த சிறுவனை மீட்க முயற்சி செய்தனர்.
ஆனால் உள்ளே இறங்கி அவரை மீட்க முடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உறை கிணற்றில் இறங்கி அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை சடலமாகவே மீட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தமிழ்செல்வனின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிந்து தமிழ்செல்வன் தற்கொலைக்கு வேறு ஏதும் உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.