பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நஞ்சுண்டாபுரம் ரோட்டில் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுல் ரோஷன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமாகவே மாணவர்கள் பாடம் படித்து வருகின்றனர். இதனால் பவுல் ரோஷனும் ஆன்லைன் மூலமாகவே பாடங்களை படித்து வந்துள்ளார். இவர் அரையாண்டு தேர்வில் எதிர்பார்த்ததை விட குறைந்த மதிப்பெண் பெற்றதால் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் மதியம் உணவு சாப்பிட்டு விட்டு அறைக்கு தூங்குவதாக சென்ற பவுல் ரோஷன் விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் நீண்ட நேரமாக அறை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அறைக்கு சென்று பார்த்தபோது தங்களது மகன் தூக்கிட்டு கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ராமநாதபுரம் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.