அக்காவின் துப்பட்டாவால் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் கழுத்தை துப்பட்டா இறுக்கியதால், சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜெயில் பேட்டை குடிசை மாற்று வாரிய காலனி குடியிருப்பில் மலர்மன்னன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வ வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் தெய்வ வள்ளியின் இரண்டாவது மகனான பிரபாகரன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டு வேலை செய்வதற்காக தெய்வவள்ளி வெளியில் சென்றபோது அவரது குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது பிரபாகரன் தனது அக்காவின் துப்பட்டாவை தனது வீட்டில் உள்ள ஜன்னல் கம்பியில் கட்டி அதில் அமர்ந்து ஊஞ்சல் ஆடிய போது, எதிர்பாராதவிதமாக அந்த துப்பட்டா பிரபாகரனின் கழுத்தை சுற்றி இறுக்கி விட்டது.
அந்த சமயம் அவரின் அருகில் யாரும் இல்லாததால் உயிருக்கு போராடிய சிறுவன் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டான். இதனையடுத்து தெய்வ வள்ளி வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, தனது மகன் ஊஞ்சலில் பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அவர் கதறி அழுத சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை வருகின்றனர்.