நண்பர்கள் கண்முன்னே சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் சிட்கோ நகர் 7வது குறுக்குத் தெருவில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதித்யா என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஆதித்யா தனது நண்பர்களுடன் சிட்கோ நகர் அருகே உள்ள ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் குளித்துக்கொண்டிருந்த ஆதித்யா ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால் சேற்றில் சிக்கிக் கொண்டார். மேலும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பலியானார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் சத்தம் போட்டனர். இச்சம்பவம் குறித்து வில்லிவாக்கம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின் ஆதித்யாவின் உடலை மீட்ட போலீசார் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.