இளம்பெண்ணை காரில் கடத்த முயற்சி செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள அத்திமாஞ்சேரி காலனியில் வசித்து வரும் ஜெயக்குமார் என்ற வாலிபர் கடந்த 6 ஆண்டுகளாக கொடிவலசை பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவரை ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் ஜெயக்குமாரை காதலிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று இளம்பெண் தனது தாயாருடன் நகை கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது ஜெயக்குமார் தனது நண்பரான விஜய் என்பவருடன் இணைந்து காரில் கடத்த முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனயாக கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார்.
இதனையடுத்து இளம்பெண்ணின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஜெயக்குமார் மற்றும் விஜயை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பள்ளிப்பட்டு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து வாலிபர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.