பிரேசில் அதிபா் ஜெயிர் பொல்சொனாரோ, தனது இல்லத்திலுள்ள குளியலறையில் டிசம்பர் 24ஆம் தேதி வழுக்கி விழுந்தார். அதையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். அதனைத் தொடா்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம் இப்போது நலமாக இருப்பதாக நாட்டு மக்களிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், குளியலறையில் வழுக்கி விழுந்ததைத் தொடர்ந்து, தனது பழைய நினைவுகள் மறந்து போனதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மறுநாள்தான் கொஞ்சம் கொஞ்சமாக தனது நினைவுகள் திரும்பியதாகத் தெரிவித்தார். மேலும் அவர், ‘நான் தற்போது நலமாக இருந்தாலும் சில காரியங்கள் தனது நினைவுக்கு வரவில்லை.
உதாரணமாக, நான் எப்படி விழுந்தேன் என்பதே தெரியாமல் இருந்தது. தற்போதுதான் நான் பின் பக்கமாக தடுக்கி விழுந்ததும், அடிபட்டதும் நினைவுக்கு வந்தது. இனி, நான் கவனமாகச் செயல்படுவேன்’ என்று கூறியுள்ளார்.