அமேசான் தீ விபத்து குறித்து G7 மாநாட்டில் பேசிய பிரான்ஸ் அதிபரின் மனைவியை கிண்டலடிக்கும் விதமாக பிரேசில் அதிபர் சமூகவலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
பிரேசிலில் அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்ததால் ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடி குறித்து ஜி-7 உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வலியுறுத்தி இருந்தார். ஆனால் இந்த யோசனைக்கு கண்டனம் தெரிவித்த பிரேசில் அதிபர் போல்சோனரோ காடுகளில் ஏற்பட்டுள்ள தீ விபத்து குறித்து 7 நாடுகள் விவாதிக்க வேண்டும் என்று கூறுவது காலனி ஆதிக்கத்தின் மனோபாவத்தை காட்டுவதாக தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த பிரான்ஸ் அதிபர் அமேசான் காடுகளில் பற்றிய தீயை அணைக்க சம்பந்தப்பட்ட தென் அமெரிக்க நாடுகளுக்கு 20 மில்லியன் டாலர்கள் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்த அவர், இந்த விவகாரத்தில் பிரான்ஸ் ராணுவ உதவி வழங்கும் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய பிரேசில் அதிபர், அமேசன் விவகாரத்தில் தேவையற்ற அர்த்தமற்ற தாக்குதலை பிரான்ஸ் அதிபர் நடத்துவதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஒரு மீம் ஒன்றை பிரேசில் அதிபர் வெளியிட்டார். அதில்,
இரு நாட்டு அதிபர்களும் அவர்களது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. மேலும் பிரான்ஸ் அதிபர் மனைவி அவரை விட 25 வயது மூத்தவர் என்றும், தனது மனைவி என்னை விட 25 வயது இளையவர் என்பதையும் மறைமுகமாக குறிப்பிட்டு இந்த பொறாமையில் தான் அமேசான் குறித்து தவறாக பேசுவதாக அந்த மீம்ஸ்கள் கிண்டலடித்து பேசுகிறது.இது சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் பிரான்ஸ் அதிபர் இதுகுறித்து பேசுகையில், ஒரு நாட்டின் அதிபர் இத்தகைய பதிவை வெளிட்டு நெறி தவறி நடப்பது தனக்கு வேதனை அளிப்பதாகவும், பிரேசில் மக்கள் மீது தான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், அவர் மென்மையாக தெரிவித்துள்ளார்