Categories
உலக செய்திகள்

“2 அரசியல்வாதிகள் நேருக்கு நேர் மோதல்!”…. குத்துச்சண்டையில் முடிந்த வாக்குவாதம்…. பிரேசிலில் நடந்த சுவாரஸ்யம்…..!!

பிரேசிலில் 2 அரசியல்வாதிகள் குத்துச்சண்டையில் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக எந்த நாட்டு அரசியல்வாதிகளாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் தாக்கி கடுமையாக பேசிக்கொள்வார்கள். ஆனால், பிரேசிலில் அரசியல்வாதிகள் இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனை குத்துச்சண்டையில் வந்து முடிந்திருக்கிறது. அதன்படி கலப்பு தற்காப்பு கலை மூலமாக அவர்கள் சண்டையிட்டுள்ளனர்.

அதாவது, கராத்தே, தாய் பாக்ஸிங், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஜூடோ மற்றும் ஜூஜிட்ஸு ஆகிய பல விதமான தற்காப்பு கலைகளை ஒரே சமயத்தில் பயன்படுத்தி சண்டையிடுவதற்கு பெயர் தான் கலப்பு தற்காப்பு கலை. பிரேசில் நாட்டில் வடக்கு பகுதியில் இருக்கும், அமேசோனாஸ் மாநிலத்தின் போர்பா நகரின் மேயரான சிமாவோ பெய்ஷோட்டோ என்பவருக்கும், அந்நகரின் முன்னாள் கவுன்சிலரான எரினியூ ஆல்வாஸ் டா சில்வா என்பவருக்கும் இடையில் தான், அதிக நாட்களாக மோதல் இருந்து வந்திருக்கிறது.

இந்நிலையில், சில்வா, மேயர் மீது அதிகமான புகார்களை தெரிவித்திருக்கிறார். இணையத்தின் மூலமாகவும், அவரின் தலைமையை குறை கூறி வந்துள்ளார். மேலும், மோசமான வார்த்தைகளால் அவரை திட்டியுள்ளார். இந்நிலையில், தன்னுடன் நேருக்கு நேராக சண்டையிட வருமாறு ஒரு வீடியோவில் மேயரை அழைத்திருக்கிறார்.

அதற்கு மேயரும் வீடியோ மூலமே பதில் கொடுத்திருக்கிறார். “மோதலுக்கு நான் தயார், எந்த இடத்தில்? எப்போது? எப்படி? என்று கேட்டதோடு, நான் வீதியில் சண்டை போடும் போக்கிரி கிடையாது, நான் மேயர் பொறுப்பில் உள்ளேன். சண்டை போட்டே ஆக வேண்டும் என்பது தான் அவரின் விருப்பம் என்றால், நான் தயார், நான் என்றைக்கும் தோல்வியைத்தான் பரிசாக கொடுத்திருக்கிறேன்”. என்று தன் முகநூல் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இவர்களுக்கான சண்டை தொடங்கப்பட்டது. இதற்காக பொதுமக்கள் பலரும் வெகு ஆர்வமாக கூடியிருந்தார்கள். இருவரின் ஆதரவாளர்களும் சண்டையை பார்க்க ஆர்வமாக இருந்தனர். அதன்படி தொடங்கிய போட்டியில் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கினர். தங்களுக்கு கிடைத்ததை எல்லாம் தூக்கி அடித்தனர்.

இதில், கவுன்சிலர் சில்வா சிறிது கூட அசையவில்லை. முதல் இரண்டு சுற்றில் மேயரை காட்டிலும் இவர் கவுன்சிலர் தான் பலமாக இருந்தார். ஆனால் போட்டியின் இறுதியில் மேயர் வெற்றி பெற்றதாக நடுவரால் அறிவிக்கப்பட்டது. சண்டை முடிந்த பின் வெற்றியடைந்த மேயர் பேசியதாவது, “நகர மக்களிடம் இது போன்ற விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்காக தான் இந்த சண்டை போட சம்மதித்தேன்” என்று தெரிவித்திருக்கிறார்!.

Categories

Tech |