தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் பரிசோதனை எண்ணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 6 ஆம் தேதி முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் நாளை முதல் 20-ஆம் தேதி வரை சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன் களப்பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊடகத் துறையினர், மின்னணு வணிகத்தினர், அரசு மற்றும் தனியார் வங்கி பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.