சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. நவம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. பருவமழை முடிந்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவியது. இந்நிலையில் இன்று சென்னையில் கடந்த 6 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
இதில் சென்னை டி நகர், தேனாம்பேட்டை, அண்ணாநகர், மதுராந்தகம், வாலாஜா சாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, கேளம்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது. சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணியை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு ககன்தீப் சிங் பேடி ஆணை பிறப்பித்துள்ளார்.