அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிரந்தர பொதுச் செயலாளர் தேர்வு செய்வதற்கான தேர்தல் நான்கு மாதங்களுக்குள் நடத்த வேண்டும். இது அதிமுகவில் மிக முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.
இதை அடுத்து ஓபிஎஸ் இடம் இருந்த பொருளாளர் பதவி அவரிடமிருந்து முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது. பொருளாளர் பதவிக்கான அனைத்து அதிகாரங்களையும் பொதுசெயலாளருக்கே வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். மேலும் அதிமுக நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் அடுத்த பொதுச் செயலாளர் இ பி எஸ் என்பது உறுதியாகிவிட்டது.
இந்நிலையில் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்ஐ நீக்க பொதுக்குழுவில் தனி தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. பொருளாளர் ஓபிஎஸ் இடம் இருந்த அனைத்து அதிகாரமும் பறிக்கப்பட்ட நிலையில்,ஓபிஎஸ்ஐ நீக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதை அடுத்து ஓபிஎஸ்ஐ நீக்க இபிஎஸ் தனி தீர்மானம் கொண்டு வருகிறார். ஏற்கனவே அதிமுக பொது குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது