அதிமுக தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்துவோம் என பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.
அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
அதன்படி அதிமுக நேற்று பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட மக்களை கவரும் வகையிலான தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. இந்நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்துவோம் என கூறப்பட்டிருந்தது. இதற்கு பாஜக பொறுப்பாளர் சிடி.ரவி குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறமாட்டோம். அதிமுக தேர்தல் அறிக்கை அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்துவோம். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அதிமுக முடிவெடுக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.