அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிரந்தர பொதுச் செயலாளர் தேர்வு செய்வதற்கான தேர்தல் நான்கு மாதங்களுக்குள் நடத்த வேண்டும். இது அதிமுகவில் மிக முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.
இதை அடுத்து ஓபிஎஸ் இடம் இருந்த பொருளாளர் பதவி அவரிடமிருந்து முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது. பொருளாளர் பதவிக்கான அனைத்து அதிகாரங்களையும் பொதுசெயலாளருக்கே வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். மேலும் அதிமுக நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் அடுத்த பொதுச் செயலாளர் இ பி எஸ் என்பது உறுதியாகிவிட்டது. மேலும் அதிமுக பொது குழுவில் 16 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக பொருளாளருக்கான அதிகாரங்களை குறைத்து பொதுச் செயலாளருக்கு கூடுதல் அதிகாரம் தரப்பட்டது. அதாவது வங்கி நடவடிக்கைகளில் ஈடுபட, கடன் விவகாரம் ஆகியவற்றில் ஈடுபட பொதுச்செயலாளருக்கே முழு அதிகாரம் உள்ளது. வரவு செலவுகளை ஆராய்தல், நிர்வகித்தல் உள்ளிட்ட பொறுப்புகள் பொதுச் செயலாளர் வசம் செல்கின்றன. மேலும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரி கையெழுத்து இடும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உள்ளது என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.