இந்தியாவில் ஆண்டுதோறும் நவ., 26ம் தேதி அரசியலமைப்பு சட்ட தினம் அல்லது தேசிய சட்ட தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1949ம் ஆண்டில் இந்த நாளில், இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டது. இந்த நாளை நினைவு கூரும் வகையில், அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடப்படும் என்று 2015ல் மத்திய அரசு ஆணை பிறப்பித்தது.
முன்னதாக இந்த நாள், தேசிய சட்ட தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. அரசின் பல்வேறு துறைகளும் இந்த நாளை விமரிசையாக கொண்டாடி வருகின்றன.
அந்தவகையில் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு அரசியலமைப்பு தினம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் மைய மண்டபத்தில் கொண்டாடப்படுகிறது. காலை 11 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவை தலைவர், அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை தொடங்கியது.
அப்போது பேசிய அவர், அம்பேத்கரின் பெயரை நாம் காப்பாற்ற வேண்டும். அரசியலமைப்பு சாசனத்தை நாம் முழுமையாக பின்பற்ற வேண்டும். அரசியலமைப்பு தினம் என்பது நாடாளுமன்றத்தை வணங்கும் தினம். அம்பேத்கர் பரிசளித்த அரசியல் சாசனத்தை நாம் எப்போதும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும் என்று பேசியுள்ளார்.