தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தலைமையில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. இந்த அம்மா உணவகத்தின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகும் கூட இந்த அம்மா உணவகம் வழக்கம்போல் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி வந்தபிறகு அம்மா உணவகம் மூடப்படும் அல்லது பெயர் மாற்றப்படும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆனால் அதற்கு மாறாக அம்மா உணவகம் வழக்கம்போல் செயல்பட்டது. அதுவும் அம்மா உணவகம் என்ற பெயரிலேயே செயல்பட்டது. சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் மக்கள் உணவின்றி பசியோடு போராடி வந்தனர். அப்போது பெரும்பாலும் பல மக்களுக்கு இந்த அம்மா உணவகம் தான் கை கொடுத்தது. இந்நிலையில் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் கருணாநிதி கண்ட பட்டினியிலா தமிழ்நாட்டை உருவாக்கவும், முதல்வர் முக ஸ்டாலின் ஆணைப்படி தமிழகம் முழுவதும் 500 சமுதாய உணவகங்கள் ‘கலைஞர் உணவகம்’ என்ற பெயரில் அமைக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் விதமாக கலைஞர் உணவகம் அமைப்பதா? புதிய உணவகம் அம்மா உணவகம் என்ற பெயரிலேயே செயல்பட நடவடிக்கை தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.