தமிழக அரசின் திட்டங்கள், சலுகைகளைப் பெற அடையாள ஆவணமாக ஆதார் எண்ணை மக்கள் தர வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசின் பலன்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என தமிழக நிதித்துறை சார்பில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதார் தர வேண்டும். ஆதார் ஒதுக்கப்படும் வரை ஆதார் இல்லாதவர்களுக்கும் அரசின் பலன்கள் வழங்கப்படும் என தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் ஆதார் கேட்கப்படும் நிலையில் பொதுவான உத்தரவை பிறப்பித்துள்ளது நிதித்துறை. மின்சார மானியம் உள்ளிட்ட சில திட்டங்களுக்கு ஏற்கனவே ஆதார் எண் கேட்கப்படுகிறது.