தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிவடைந்துள்ளது. ஆனால் இன்னும் 43 ஆயிரம் காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசத்தை மேலும் 10 நாட்கள் நீடிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. எஞ்சியுள்ள 43,000 இடங்களை நிரப்ப கூடுதலாக 10 நாட்கள் தேவைப்படுவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
இந்நிலையில் இதனை ஏற்றுக்கொண்ட அரசு, தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான அவகாசத்தை வரும் 13ஆம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இன்றுவரை 73,086 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் என கூறியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.