கடந்த வாரம் உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 10-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. இந்தப் போர் காரணமாக ரஷ்யா-உக்ரைன் ஆகிய இருநாடுகளிலும் உயிரிழப்புகள் அதிகம் நேர்ந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை முற்பகல் 10.00 (உள்ளூர் நேரம்) முதல் நிறுத்தி வைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைனில் 10 நாட்களாக போர் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், உக்ரைன் மக்களும், அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டினரும் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் போர் நடக்கும் இடங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற உதவும் வகையில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இவ்வாறு தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள ரஷ்யா, உக்ரைன் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறும்படி அறிவுறுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக டொனட்ஸ் குடியரசில் உள்ள அசோவ் கடற்கரை நகரமான மரியுபோல், மற்றொரு நகரமான வோல்நோவாகாஆகிய இடங்களில் இருந்து மக்களை வெளியேறும்படி கேட்டுக்கொண்டுள்ளது. இதன் காரணமாக இந்த இடங்களில் ரஷ்யா தீவிர தாக்குதலை தொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.