‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுவதாக ஏகே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
‘இந்தியன் 2’ படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இவிபி பிலிம் சிட்டியில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரவு 9 மணியளவில் செட் அமைக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக, ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது. இதில் பல அடி உயரத்தில் இருந்து விழுந்த ராட்சத கிரேனில் சிக்கி உதவி இயக்குனர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மது மற்றும் கலை உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் பலியாகினர்.
மேலும் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக நசரத் இணை இயக்குனர் குமார், நசரத்பேட்டை காவல்நிலையத்தில் லைக்கா நிறுவனம் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யவில்லை , கிரேன் ஆப்ரேட்டர் அஜாக்கிரதையாக இருந்தார் என்று புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை விளைவித்தல், காயம் ஏற்படுத்துதல், இயந்திரத்தை தவறாக பயன்படுத்துதல் என 3 பிரிவுகளின் கீழ் கிரேன் ஆபரேட்டர் ராஜன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவனை தேடி வந்த நிலையில் இன்று சென்னையில் கைது செய்தனர். அதேபோல் லைகா நிறுவனம் மற்றும் கிரேன் உரிமையாளர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கு குறித்து சம்பவ இடத்தில் யார் யார் இருந்தார்கள் என்ற பட்டியலை தயாரித்துள்ள போலீசார் நடிகர் கமல், இயக்குனர் சங்கர், காஜல் அகர்வால் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்தனர். மேலும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 10 பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பான வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.