தமிழகம் முழுவதிலும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடைகளை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அதிமுக கடந்த சில நாட்களாக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது. இருந்தாலும் சில துறைகளைச் சார்ந்தவர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று பேருந்து ஊழியர்கள் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு அரசு எதுவும் செவி சாய்க்காததால் இன்றும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சலூன் கடைகளை மூடி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு, தங்களது சமூக மக்களுக்கு தனி சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சலூன் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.