தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அம்மா உணவகம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் மிக குறைந்த விலையில் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வந்தது. அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திட்டம் திமுக ஆட்சிக்கு வந்தால் தொடருமா என்று மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்தன. ஆனால் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் அம்மா உணவகம் அதே பெயரில் இயங்கும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரது கட்சியை சேர்ந்தவர்கள் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க நிதி அளிக்க உள்ளனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் செயல்படும் அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் இயங்கும் அம்மா உணவகத்தில் ஊரடங்கு முடியும் வரை தனது சொந்த செலவில் உணவு வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.