கள்ளக்குறிச்சி கலவரம் ஏற்பட்ட கனியாமூர் பள்ளியின் மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்க உள்ளது. அதிலும் குறிப்பாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாரதி, குறிஞ்சி மற்றும் பாலாஜி ஆகிய மூன்று தனியார் பள்ளிகளில் அடுத்த வாரம் பாடம் நடத்துவதற்கு வகுப்பறைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.இவர்களுக்கு சக்தி மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கலவரம் உண்டான தனியார் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காதவாறு நடவடிக்கை எடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனைக்கு பிறகு கனியாமூர் பள்ளியில் கலவரம் ஏற்பட்டதால் பள்ளி முற்றிலும் சேதம் அடைந்து மாணவர்கள் படிக்க முடியாத நிலை உள்ளது. அதனால் மாணவர்களின் கல்வி பாதிக்காத அளவுக்கு அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும்.பெற்றோர்கள் விரும்பினால் அருகில் உள்ள பள்ளியில் அந்த மாணவர்களை சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழகத்தின் கருத்துக்களை கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று முதல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகின்றன.