கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் இருந்து பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் புதிதாக உருமாறியுள்ள கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். அங்கிருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனால் கர்நாடகாவில் நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். மேலும் ஜனவரி 2ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு செயல்படுத்தப்படும் என்றும், தேவையின்றி மக்கள் வெளியே வரக்கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்பட்டு வந்த தமிழக அரசு பேருந்துகள் இரவு நேரம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, சேலம் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூர் செல்லும் பேருந்துகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.