விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே தேவனூரில் சின்னத்துரை என்பவர் வசித்து வந்தார். இளம் விவசாயியான இவர் பணிக்காக டிராக்டர் ஒன்றை ஸ்ரீராம் நிதி நிறுவனத்தின் மூலம் கடனாக பெற்றுள்ளார். இதற்கு ரூ.30,000 மூன்று மாதத்திற்கு ஒரு முறை கட்டி வந்த நிலையில் நிலுவை தொகை 3 தவணைகள் நிலுவையில் இருந்திருக்கிறது. இந்த நிலையில் நிதி நிறுவன ஊழியர்கள் இன்று காலை கடன் தொகையை செலுத்தவில்லை என்று கூறி விவசாய நிலத்தில் இருந்த டிராக்டரை பறிமுதல் செய்து சின்னதுரையை கடுமையான சொற்களால் திட்டியுள்ளனர்.
இதனால் வேதனை அடைந்த சின்னதுரை தனது சொந்த விவசாய நிலத்திலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சின்னதுரையின் உறவினர்கள், விவசாயி சின்னதுரையை தனியார் நிறுவன ஊழியர்கள் தகாத வார்த்தையால் திட்டியது தான் அவருடைய தற்கொலைக்கு காரணம். எனவே சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி செஞ்சி சேத்துப்பட்டு – தேவனூர் கூட்டு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.