பெங்களூரு சிறையில் இருக்கும் இளவரசிக்கு இன்று கொரோனா பரி சோதனை நடத்தப்படுவதாக சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு நேற்று முன்தினம் திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் மருத்துவக்குழு பெங்களூரு சிறைக்கு விரைந்தது. அங்கு அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்ததால் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பிறகு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சசிகலா உடல்நிலை குறித்து பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை பரபரப்பு அறிக்கையை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருக்கிறது. நுரையீரல் சளி அதிகமாக இருக்கும் நிலையில்,நேற்று 75 சதவீதமாக இருந்த ஆக்சிஜன் அளவு இன்று 95 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதனால் அவரின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்று பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்படுவதாக சிறை கண்காணிப்பாளர் லதா தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சசிகலா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த இளவரசிக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது.