வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னையில் தொடர்ந்து அதிக கனமழை பெய்து வருகிறது.கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள 11 சுரங்கப்பாதைகள் மழைநீரால் மூழ்கியுள்ளது.மக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம் என்று மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாநகர் முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளதால் சென்னை மக்கள் கடந்த 4 நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக பேரிடர் மீட்பு குழுவினர் களத்தில் இறங்கியுள்ளனர்
இந்நிலையில் சென்னை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் போது ஏற்படும் வெள்ள பாதிப்புகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய உத்தரவிடும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து கூட்டங்களிலும் தற்காலிக பணியாளர்களை பணியில் அமர்த்தி வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை சீர்செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உள்ளாட்சித்துறை அமைச்சர் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேற்கொண்ட தீர்மானத்தின் அடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து கூட்டங்களிலும் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சீர் செய்யும் பணிகளை மேற்கொள்ள மழைக்காலம் முடியும் வரை ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் பத்து தற்காலிக பணியாளர்கள் வீதம் அந்தந்த மண்டல அலுவலர்கள் வாயிலாக சுமார் 2500 எண்ணிக்கை அளவில் தற்காலிக பணியாளர்களை பணியில் அமர்த்தலாம் என கருதப்பட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல்முறை ஆணை படி தற்காலிக பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையான ஒரு நாளைக்கு 385 ரூபாய் என்கிற விகிதத்தில் சுமார் 2500 எண்ணிக்கையில் தற்காலிக பணியாளர்களை பணியில் அமர்த்த 15 நாளைக்கு அதாவது மழை காலம் முடியும் வரை தற்காலிக ஊழியர்களுக்கு பணி வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.