தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. தற்போது ஓரளவு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இதனிடையே வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவானதாகவும் இது வலுப்பெற்று புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாகை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.