தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். மீன் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையும் செயல்படும். சுற்றுலா தலங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.