விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கும் பப்ஜி மதனை பற்றி அவரது மனைவி மற்றும் தாய், தந்தையிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விளையாட்டை சட்டவிரோதமாக பயன்படுத்தி ஆன்லைன் விளையாட்டின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களை ஆபாசமாக பேசி தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதனால் அவர் மீது 160 புகார்கள் வந்ததை அடுத்து, அவரை நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் மீது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மதனின் சொந்த ஊரான சேலத்திற்கு சென்று தனிப்படை போலீசார் விசாரித்ததில் அவர் அங்கிருந்து தப்பி விட்டார் என்பது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்ட நிலையில் தர்மபுரியில் பதுங்கியிருந்த மதனை இன்று காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து மதனை கைது செய்தபோது தான் செய்தது தவறு தான் என்னை விட்டுடுங்க விட்டுடுங்க என்று கெஞ்சி அழுதுள்ளார். ஆனால் காவல்துறையினர் விடவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.