உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த 24-ஆம் தேதி அன்று உத்தரவிட்டார். இதையடுத்து ரஷ்யா-உக்ரைன் இடையே பயங்கர போர் வெடித்தது. இதனால் உலக நாடுகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளன. அதோடு மட்டுமில்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து அந்நாட்டை நிலைகுலைய செய்துள்ளது.
இந்த நிலையில் உச்சகட்ட தயார் நிலையில் இருக்கும்படி ரஷ்யாவின் அணு ஆயுத தடுப்பு படை மற்றும் அணு ஆயுதங்கள் படைக்கு அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் மீதான போர் 4-வது நாளை எட்டியுள்ள நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர், ராணுவ தளபதியுடனான ஆலோசனையின் போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை மட்டும் விதிப்பதுடன் நிற்கவில்லை, அந்நாட்டு தலைவர்களின் பேச்சும் மோசமானதாக உள்ளது என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.