எஸ்.பி வேலுமணி தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டதில் 316 ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எல்இடி பல்ப் வாங்கியதில் 500 கோடி ஊழல் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்த நிலையில், இன்று காலையிலிருந்து தொடர்ந்து எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வந்தது.. இந்நிலையில் காலை 7 மணி அளவில் தொடங்கிய அதிரடி சோதனை சுமார் 11:30 மணி வரை நடைபெற்றதில் 316 ஆவணங்கள் சிக்கி உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது..
மேலும் சோதனையின் போது 32.98 லட்சம் ரொக்கம் கண்டறியப்பட்டதாகவும், 2 வங்கி பெட்டக சாவிகள், 10 நான்கு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் 1,228 கிராம் தங்க நகைகளும், 948 கிராம் வெள்ளி பொருட்களும் கண்டறியப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.