தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. அதனையடுத்து, மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு பதவியேற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டுவருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்றிய அரசு என்றே அழைத்துவருகின்றன.
தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிலும் மத்திய அரசு, ஒன்றிய அரசு என்றே குறிப்பிடப்பட்டுவருகிறது. தி.மு.கவின் கூட்டணிக் கட்சியினரும் ஒன்றிய அரசு என்றே அழைக்கின்றனர். ஆனால், தி.மு.கவின் ஒன்றிய அரசு என்ற சொற்பிரயோகத்துக்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. மத்திய அரசு என்று அழைக்க வேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்திவருகிறது. ஒன்றிய அரசு என்ற சொற்பிரயோகத்துக்கு எதிராக வழக்குத் தொடர்வோம் என்று பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் மத்திய அரசை ஒன்றியம் என அழைப்பதும், ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை விடுபட்டு உள்ளது. இதுபோன்ற தேசபக்தி அற்ற செயல்கள் அரசியலமைப்பிற்கு எதிரான செயல்கள் சட்டசபையில் நடைபெறுகிறது. இந்திய அரசை, ஒன்றிய அரசு என அழைக்கும் தமிழக அரசின் பேச்சிற்கும், எழுத்திற்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
மேலும், நம் நாட்டை தேசத்தை இந்தியா அல்லது பாரதம் என்று அழைக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பழனியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமசாமி உயர் நீதிமன்ற மதுரையில் கிளையில் பொது நல வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், ‘தமிழக முதல்வரும், அமைச்சர்களும் இவ்வாறு தான் பேச வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட இயலாது. தடுப்பூசி போடுங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ஆனால் கட்டாயம் என உத்தரவிட முடியாது. காரணம் தனி மனித உரிமை’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.