தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியின் 3-வது வார்டில் பாஜக சார்பாக போட்டியிட்ட கோபிநாத் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சுரேஷ் 173 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், கோபிநாத் 174 வாக்குகள் பெற்றார். மேலும் தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளில் பாஜக 100 வார்டுகளுக்கு மேல் வென்று, தற்போது 4-வது இடத்தில் இருக்கிறது…