சென்னை ஆர்.எ.புரம் பசுமை வழி சாலையில் உள்ள ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு நேற்று வானகரத்தில் நடைபெற்றது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ பன்னீர்செல்வம் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் என இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரிய கலவரமாக மாறியது. இதை போலீசார் பெரும் போராட்டத்திற்கு பின்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர். வருவாய் துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
அதிமுக அலுவலகத்தை சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கினர். அலுவலகத்தின் பின்பக்க கதவு, முன் பக்க கதவு, முன் பக்கம் நுழைவாயில் கதவு ஆகியவற்றை இழுத்து மூடி சீல் வைத்தனர். போலீஸ் தடுப்புகளை அமைத்து அதிமுக தலைமை அலுவலகத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் சென்னை ஆர்.எ.புரம் பசுமை வழி சாலையில் உள்ள ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒற்றை தலைமை விவகாரத்தில் நேற்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்புகள் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்ட நிலையில், ஓபிஎஸ் உயிர்க்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவரின் ஆதரவாளர்கள் கூறியிருந்ததால் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.