வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சென்னை அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையின் தென் கிழக்கு திசையில் 220 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை முதலே சென்னையில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை சென்னை அருகே கரையைக் கடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையிலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.