கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாநில அரசுகளின் சட்டங்கள் நன்கொடை வசூலிப்பதை தடுக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பல்வேறு கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் அறக்கட்டளை மூலமாக வசூலித்த நன்கொடைகளுக்கு வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை மதிப்பீட்டு ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்து இருந்தன. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானவரித்துறை உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும், இந்த நன்கொடை வசூலிப்பதற்கு வரி விதிக்ககூடாது எனவும், கல்வி நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நன்கொடை வசூலிப்பது ஒரு தண்டனைக்குரிய குற்றம் நன்கொடை வசூலிக்க கூடாது என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் அறிவுறுத்தி இருக்கிறார்கள். நன்கொடை வசூலிப்பதை தடுப்பதற்கான விதிகள் மாநில அரசின் சட்டங்களில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டி அதிருப்தியை பதிவு செய்தார்கள்..
மத்திய மாநில அரசுகள் கல்வி நிறுவனங்களால் நன்கொடை வசூலிக்கப்படுவதை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கள் உத்தரவில் குறிப்பிட்டார்கள்.. குறிப்பாக கல்வி நிறுவனங்கள் வசூலிக்கின்ற நன்கொடை விவரங்களை தெரிவிக்க இணையதளத்தை உருவாக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள்..இதையடுத்து வழக்குகள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நன்கொடை வசூலிப்பது தடுப்பதற்கான நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தலாக வழங்கி இருக்கிறார்கள்.