ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் உருவகொண்டா அருகே நேற்று கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 9 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து உருவகொண்டா காவல் துணை ஆய்வாளர் வெங்கட சுவாமி கூறியபோது, காரில் ஓட்டுநர் உள்பட மொத்தம் 9 பேர் காரில் பயணம் செய்தனர். இந்த சம்பவமானது நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. அதாவது காரில் அனைவரும் நிம்மகல்லுவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக சென்ற லாரி எதிர் திசையில் வந்த கார் மீது மோதியது” என்று அவர் கூறினார்.