புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு பாதிப்பினால் பாதிக்கப்பட்ட பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது நம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சில நோயாளிகளுக்கு காலரா இருப்பது உறுதியாகியது. இதை எடுத்து பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தி அறிவித்துள்ளது.
அதனால் மக்கள் அனைவரும் கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். சாப்பிடும் முன்பு கைகளை நன்றாக கழுவ வேண்டும். பாதுகாப்பான கழிப்பிட வசதிகளை பயன்படுத்த வேண்டும்,வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை அரசு வழங்கியுள்ளது.
இந்நிலையில் காரைக்காலில் காலரா பாதித்த இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அங்கு பொது சுகாதார அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரை 1,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்த ஒருவரில் புற்றுநோயும் மற்றொருவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளது. நோய் தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் காரைக்காலில் சிலருக்கு காலரா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.