திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போலவே கோவில் வளாகத்தில் சாமி உலா நடைபெற்று வருகிறது. வழக்கமாக தீபத் திருவிழாவின்போது மகாதீபம் ஏற்றப்படும் நாளன்று, அந்த சமயத்தில் வரும் பௌர்ணமி அன்றும் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய மலையைச் சுற்றி கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள்.
ஆனால் இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலையில் மலை ஏறிச் சென்று மகாதீப தரிசனம் செய்யவும், அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேர், வெளியூர் பக்தர்கள் 15 ஆயிரம் பேருக்கு அனுமதி எனவும் தெரிவித்துள்ளது.