தமிழகத்தில் பல்வேறு துறைகள் சார்பாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக புதிய கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார். இதையடுத்து தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், உரிமையை பெறவும் குழந்தைகளுக்கான மாநில கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 1148 குழந்தைகளுக்கு நிதியுதவியும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் கருணை அடிப்படையில் 15 பேருக்கு பணி நியமன ஆணையையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் தடய அறிவியல் துறை சார்பாக உருவாக்கப்பட்ட தடய மரபணு தேடல் மென்பொருளை நாட்டுக்கு அர்ப்பணித்தார் முதல்வர் ஸ்டாலின். மாநிலங்களுக்கு இடையே செயல்படும் குற்றவாளிகளின் தொடர்பை கண்டறிதல், கரையோரம் ஒதுங்கும் அடையாளம் காண இயலாத உடல்கள் மற்றும் மனித எலும்புகளை மரபணு ஆய்வு மூலம் அடையாளம் காணுதல். தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள், இயற்கைப் பேரிடர்களால் உயிரிழந்த நபர்களை கண்டறிதல் போன்ற பணிகளை மிக எளிதாகவும் துரிதமாகவும் மேற்கொள்ள இயலும்.
மேலும் உள் துறை சார்பில் ரூ.44.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்கள், காவல்துறை கட்டிடங்கள், உதவி சிறை அலுவலர் குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி, ராஜ கண்ணப்பன், தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.