வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சென்னை அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையின் தென் கிழக்கு திசையில் 220 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குணா குகை, மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண்பாறை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.