நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.
இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக நோயாளிகள் உயிர் இழப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் 17 பேர் சிகிச்சை பெற்று வந்த தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், அதில் 13 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.