Categories
மாநில செய்திகள்

BREAKING : கோட நாடு வழக்கு… ரவியின் மனு தள்ளுபடி… மேல் விசாரணைக்கு தடையில்லை… நீதிமன்றம் அதிரடி..!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடையில்லை என்று  சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது..

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில்  அதிகாலை நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இந்த வழக்கில் மேலும் சில கூடுதல் தகவல்களை திரட்டுவதற்காக காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விசாரணையை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக இருக்கும் சயான், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து ஊட்டியில் தங்கியிருக்கிறார்.. அதனை தொடர்ந்து அவரை மீண்டும் மறுவிசாரணைக்காக ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இதனையடுத்து சயான் கடந்த 17ஆம் தேதி ஊட்டியில் இருக்கும் நில அபகரிப்பு தடுப்பு தனி பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரானார்.. அவரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ் மற்றும் விசாரணை அதிகாரியான கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் கிட்டத்தட்ட 3 மணி நேரம் விசாரணை நடத்தினர் .

அந்த விசாரணையில் சயான், அதிமுகவின் முக்கிய பிரமுகர்களுக்கு இந்த கொடநாடு வழக்கில் தொடர்பு இருக்கிறது என்று தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் பல்வேறு அதிர்ச்சியூட்டும்  தகவல்களை சயான் காவல்துறையினரிடம் கூறியிருக்கிறார். அந்த விவரங்கள் அனைத்தையும் காவல்துறையினர் வாக்குமூலமாக பதிவு செய்து வைத்துள்ளனர்..

இதனைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் காருக்கு முன்னாள் டிரைவராக பணியாற்றிய சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் அண்ணன் தனபாலிடம் விசாரணை நடத்த முடிவு செய்து அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.. இதில் கனகராஜ், கொடநாடு வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில், சம்பவம் நடந்த சில நாட்களிலேயே அவர் விபத்தில் சிக்கி இறந்து போனார். அதனை தொடர்ந்து கனகராஜின் அண்ணன் தனபால், தன்னுடைய சகோதரர் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறி வந்தார். இதனால் தனபாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து கடந்த 24ஆம் தேதி  ஊட்டிக்கு வந்த தனபால் காவல்துறையினர் முன்பு ஆஜரானார். சுமார் ஒரு மணி நேரம் அவரிடம் காவல்துறையினர் விசாரித்துள்ளனர். தனது தம்பி விபத்தில் சாகவில்லை.. அது மரணம் கிடையாது.. திட்டமிட்ட கொலை. எனவே கனகராஜின் விபத்து வழக்கை மறுபடியும் விசாரணை நடத்த வேண்டும் என அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

சயான் மற்றும் கனகராஜின் சகோதரரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ள நிலையில் இந்த வழக்கு இன்று (27ஆம் தேதி) நீலகிரி மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.. சயானும் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.. அப்போது சயான், தனபால் கொடுத்திருக்கும் வாக்குமூலம் விவரங்களை போலீசார் அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கை  செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று காலை தெரிவித்தது.

அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் கீழமை நீதிமன்ற வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்..

மேலும் இந்த வழக்கின் சாட்சிகளில் ஒருவரான கோவையைச் சேர்ந்த ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.. அதில்,  இந்த வழக்கு தொடர்பாக தனக்கு கொலை மிரட்டல் வருகிறது, எனவே போலீசார் மேல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த 24ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் புலன்விசாரணை 60 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்றும், யாருடைய நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துவது நோக்கமல்ல எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை 27ஆம் தேதி, அதாவது இன்றைக்கு  அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

இந்த தீர்ப்பு உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது கூடுதல் விசாரணைக்கு தடை கோரிய சாட்சி ரவியின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.. மேலும் நீதிபதி நிர்மல் குமார் கூறியதாவது, கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த காவல் துறைக்கு அதிகாரம் உள்ளது. போலீஸ் தாக்கல் செய்யும் ஆவணங்களை ஏற்பதா? வேண்டாமா? என்பதை நீலகிரி நீதிமன்றம் முடிவு செய்யும்.. வழக்கு விசாரணை தாமதம் ஆனாலும் உண்மையை கண்டறிவதில் கூடுதல் விசாரணை உதவியாக இருக்கும்.. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தாலும், செய்யாவிட்டாலும் காவல்துறை கூடுதல் விசாரணை நடத்தலாம் என்று கூறினார்..

Categories

Tech |