தமிழக கோவில்களில் உள்ள நகைகளை உருக்குவது தொடர்பாக ஆறு மாதங்களுக்கு எந்த முடிவும் எடுக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக அரசு பதவி ஏற்ற பிறகு அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களுக்கு சொந்தமான நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து கோவில்களை சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளதாக இந்து அறநிலை துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்ட நிலையில் இதனை எதிர்த்து வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த மனுவில் இந்து சமய அறநிலையச் சட்டத்தில் கோயில்களுக்கு சொந்தமான நகைகளை உருகுவதற்கு எந்த அனுமதியும் கிடையாது. அறநிலைத்துறை கோவில் நிர்வாகத்தில் மட்டுமே தலையிட முடியும், மத வழிபாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது என்று தெரிவித்திருந்தார். மேலும் நகைகளை உருகுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு கடந்த அக்டோபர் 28ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது அறங்காவலர்கள் நியமிக்கப்படாத வரை கோவிலுக்கு காணிக்கையாக நகைகளை கணக்கெடுப்பதில் தவறில்லை.
ஆனால் நகைகளை உருகுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் இந்த வழக்கை டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக கோவில்களில் உள்ள நகைகளை உருகுவது தொடர்பாக ஆறு வாரங்களுக்கு எந்த முடிவும் தமிழக அரசு எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.