கோவை நவக்கரை பகுதியில் ரயில் மோதி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
கோவை மாவட்டம் நவக்கரை அடுத்த மாவுதம்பதி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று 9 மணி அளவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க காட்டு யானை, பன்னிரண்டு முதல் பதினைந்து வயது மதிக்கத்தக்க 2 பெண் யானை என்ற மூன்று யானைகள் ரயில்வே தடத்தை கடக்க முயன்றது. அப்போது ரயில் தண்டவாளத்தின் வழியாக மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் வந்துள்ளது. இந்த ரயில் யானை மீது மோதியதால் மூன்று பெண் யானைகளும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனையில் ஒரு யானை கருவுற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கருவுற்றிருந்த யானையின் வயிற்றில் இருந்து யானை சிசு இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.