பெங்களூருவில் சசிகலாவை சந்திக்கச் சென்ற கர்நாடக மாநில அதிமுக செயலாளரை சசிகலா சந்திக்க மறுத்துவிட்டார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அதன்பிறகு அவரை உடல்நிலை தேறியதால் நேற்று முன்தினம் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் பெங்களூருவில் தங்கியுள்ள சசிகலாவை சந்திக்கச் சென்ற கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜை சசிகலா சந்திக்க மறுத்து விட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலா கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால் சந்திக்க அனுமதி இல்லை என கூறப்பட்டாலும், குறிப்பிட்ட சில அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் மீது வருத்தத்தில் உள்ளதாகவும், அவர்களைத் தவிர மற்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.