சமூக இடைவெளியை பின்பற்றி புதுச்சேரியில் நாளை மதுக்கடைகள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை பெருக்கி கொள்ள மதுகடைகளை திறந்தன. தமிழகத்திலும் சென்னை தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க ஆளுநர் கிரண் பேடி அனுமதி அளிக்கமால் இருந்த நிலையில் நேற்று மது கடைகள் திறக்கலாம் என அறிவித்தார். இந்த நிலையில் புதுச்சேரியில் நாளை மதுக்கடைகள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. நாளை முதல் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடை ஊழியர்கள், மதுபான பிரியர்கள் முக கவசம் அணிவது கட்டாயம் என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் டாஸ்மாக் விலைக்கு நிகராக புதுச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தி புதுச்சேரி அரசுஅரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் விற்கப்படாத மதுபானங்களை புதுச்சேரியில் விற்றால் கூடுதலாக 25% கொரோனா வரி விதிக்கப்படும் என்றும் புதுச்சேரியில் விற்கப்படும் சாராயத்திற்கு 20% கொரோனா வரி விதித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மதுபானங்கள் மீது உயர்த்தப்பட்ட வரிகள் 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.